ஒம் ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமியே நமஹ

முதல் பக்கம் வரலாறு சேவைகள் பூஜை தேதிகள் தெய்வீக அனுபவங்கள் தொடர்பு

ஆங்கில வலைதளம் செல்ல இங்கே சொடுக்கவும்

2021 Pooja details- please click here

 

கசவை கண்ட கயிலை மூர்த்தி என்ற புத்தகத்தில் ஆசிரியர் திரு ஆனந்தன் அவர்கள் பக்தர்களின் அனுபவங்களைத் தொகுத்துள்ளார். அவற்றிலிருந்து சில:

நான் கண்ட மகான்

திரு. இருளப்பத்தேவர்

நிறுவனர்.

தி.மு.ந.நி. பள்ளி,

கசவனம்பட்டி

1939-ஆம் ஆண்டிலிருந்தே சுவாமிகளின் தரிசனம் கிடைக்கும் பாக்கியம் பெற்றேன். அந்த ஆண்டு தான் இவ்வூரில் ஒரு பள்ளியைப் புதியதாக ஆரம்பித்தேன். அன்று முதல் சுவாமிகள் பள்ளிக்குத் தினமும் வந்து போவார்கள். அது சமயமும் நிர்வாணமாகவும், இளவயதாகவும், மௌனமயமாகவும், உணவு முதல் எதையும் யாரிடமும் கேட்டுக் கொள்ளாமலேயே இருந்து வந்தார்கள். சில நேரங்களில் உணவு கொடுத்தால் கைகளால் எடுத்துச் சாப்பிடக்கூடப் பழக்கமில்லாதவராகக் காணப்பட்டார்கள். ஆகையால் நாங்களே உணவை ஊட்டி விடவும் செய்து வந்தோம். நாளாவட்டத்தில் சுவாமிகள் விருப்பங்கொண்ட நேரத்தில் உணவைப் போட்டு வைத்தால் ஒரு கைப்பிடிசாதம் உண்பார்கள். நாட்கள் செல்லச் செல்ல சுவாமிகளின் அருட்சக்தியால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஈர்க்கப்பட்டு சுவாமிகளின் மீது பக்தியும், பாசமும் வளர்ந்தன. மேலும் சுவாமியவர்கள் தினமும் நமது வீட்டிற்கு வந்து போக வேண்டும் என்ற விருப்பமும் இவ்வூர் மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்தது. அந்த விருப்பப்படியே தினமும் பலமுறை சுவாமிகள் தன் வீட்டிற்கு வந்து போகும் பாக்கியம் பெற்றவர்களுள் நானும் ஒருவன்.

      அது சமயம்தான் பள்ளியைப் பார்வை செய்ய வந்த ஆய்வாளரின் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி ஆய்வாளர் திரு. கிருஷ்ணராவ், எங்களது பள்ளியைப் பார்வையிட வந்திருந்தார்கள். ஆய்வாளர் பள்ளிக்குள் நுழைய அவர்களின் பின்னாலேயே சுவாமிகளும் உள்ளே வந்து அமர்ந்து கொண்டார்கள். சுவாமிகளின் நிர்வாணத் தோற்றத்தைக் கண்ட பள்ளி ஆய்வாளர், தலைமை ஆசிரியராக இருந்த என்னிடம் இந்த ஆளை வெளியே அனுப்பு என்று கூற அதற்கு நான் இவர் ஒரு சாமியார் ஒர் உண்மையான ஞான நிலையில் இருக்கிறார்கள். சுற்றுப்புற மக்களெல்லாம் இவரைக் கண்கண்ட தெய்வமாக வந்து வணங்கிச் செல்கிறார்கள் என்று கூற, அதற்கு ஆய்வாளர்.

"என்ன சாமியாரா? பிடித்து வெளியே தள்ளு. அவர் இங்கிருக்க நான் சம்மதிக்கவில்லை”, என்று அதிகாரத் தோரணையில் கூற, அதற்கு நான் அவர்களும் இருக்கட்டும் நீங்களும் ஆய்வு செய்யுங்கள் என்று கூற அவரைப் பிடித்து வெளியே தள்ளுகிறீர்களா? இல்லையா? நான் வேண்டுமா? அவர் வேண்டுமா என்று கேட்டார். சுவாமிகள் எங்களுக்கு வேண்டும், நீங்களும் ஆய்வு பண்ணுங்கள் எனக்கூற, அப்படியென்றால் நான் வேண்டாம், அவரையே வைத்து ஆய்வை நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்கள். எங்களுடைய பள்ளி தனியார் பள்ளி என்பதால் ஆய்வாளரின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், ஆய்வாளர் ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்று பிற ஆசிரியர்கள் வந்து என்னிடம் முறையிட அதற்கு நான் பெரியோர்கள் எல்லாம் சுவாமிகளை பெரிய ஞானியென்றும், அவர்கள் வீட்டிற்கு வந்தால் நல்லது என்றும் கூறுகிறார்கள், எல்லாவற்றையும் சுவாமிகளே பார்த்துக் கொள்வார்கள் எனக் கூறினேன்.

      பள்ளி ஆய்வாளர் வேறு சில பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்து விட்டு அன்றைய இரவு தருமத்துப்பட்டியில் தங்கியிருந்தார்கள். அது சமயம் தூக்க நேரத்தில் சுவாமிகளின் கை மட்டும் தனியாக வந்து தன் கழுத்தை நெரிப்பது போல் இருப்பது கண்டு, வாய் உளறி, வெளியில் படுத்திருந்த தருமத்துப்பட்டி தலைமை ஆசிரியரை அழைத்துத் தன் அருகில் படுக்கச் சொல்லி மீண்டும் படுத்தார். சிறிது நேரத்திற்கெல்லாம், தலைமை ஆசிரியர் தூங்கிவிட இவருக்குத் தூக்கம் வராமல் பழைய மாதிரியே, தன் கழுத்து இறுக்கக் கண்டு மீண்டும் வாய் உளறி, இரவு முழுவதும் விழித்திருந்து, அதிகாலையில் எனக்கு ஓர் ஆளை அனுப்பி வரச் சொல்லியிருந்தார்.

      என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று நடந்ததையெல்லாம் கூறி, அன்றிலிருந்து தனக்கு மன நிம்மதியின்றி ஒரு வித நடுக்கம் இருந்து கொண்டே இருப்பதாகவும் கூறினார். அதற்கு நான் சுவாமிகளின் நிலையை உணர்ந்தால் தங்கள் மனது சித்தி அடையும் என்று கூறினேன். பலமுறை வருவதாகக் கூறியவர் வரவில்லை. சிறிது காலத்திற்கெல்லாம் அவரது மனம் மிகவும் பாதிப்புக்குள்ளாகி, பதவி வகிக்க முடியாமல் பதவியை விடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

      எனது மூத்த மகன் இளங்கலைத் தேர்வில் தேர்ச்சிபண்ணாமலேயே இருந்து வந்தான். தினந்தோறும் மாலையில் சுவாமிகளுக்கு டீ வாங்கிக் கொண்டுபோய்  கொடுக்கும் பழக்கமுள்ளவனாய் இருந்து வந்தான். ஒரு நாள் மாலையில் தொடர் மழை காரணமாக, சிறிது தாமதமாக இரவு பத்து மணிக்கு மேல், அருள்மிகு முத்தாலம்மன் கோவில் உட்பிரகாரத்தில் சுவாமிகள் இருக்கும் வேளையில் டீ வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு எஞ்சிய தேனீரை அருந்தி விட்டு வந்தான். அன்று இரவு சுவாமிகள் காட்சி கிடைக்கப்பெற்று இவ்வருடம் பழனியில் மையம் போட்டு ஒரு மாதகாலம் பழனியிலேயே தங்கியிருந்து, தினந்தோறும் காலையில் பழனி மலை சென்று முருகனை தரிசனம் செய்து, தேர்வு எழுது என்று கட்டளை இட்டிருக்கிறார்கள். இதனை மறுநாள் காலையில் என்னிடம் கூறினான். நானும் அவ்வாறே, இருந்து படிக்க ஏற்பாடு செய்து கொடுத்தேன். அதன்படியே தேர்வில் வெற்றியடைந்து இன்று சீரும் சிறப்புடன் சுவாமிகளின் பார்வையால் நல்ல நிலையில் அவன் குடும்பம் இருந்து வருகிறது.

      ஆகவே, யாரும் அன்று என் குடும்பம் இருந்த நிலைக்கு எதிர்பார்க்க முடியாத அளவுக்கு வாழ்க்கையில் முன்னேற்றமும், குடும்பத்தில் அமைதியும்  ஏற்பட சுவாமியவர்களின் அருட்கடாட்சம் என் குடும்பத்திற்கு கிடைத்தது. கிடைத்துக் கொண்டே இருக்கின்றது என்பதை நாங்கள் அனைவரும் மறுக்க முடியாது.


என் உயிரில் கலந்து உறவாடும் உத்தமர் 

பேராசிரியர் சி. இராமச்சந்திரன்

முன்னாள் தலைவர், பண்பாட்டுத்துறை,

அருள்மிகு பழனி ஆண்டவர்

கலைப் பண்பாட்டுக் கல்லூரி, பழனி

பெரியகோட்டைப் பெரியவர் திருமலை சுவாமிகள்; ஒட்டன்சத்திரம் சித்தர் பெருமகனார் பற்றியும், கசவனம்பட்டி மௌனகுருநாதர் பற்றியும் குறிப்பிட்டார்கள். ஒருவர் அடிப்பார்; மற்றவர் அணைப்பார், என்று சொற்பொழிவுகளுக்கிடையே குறிப்பிட்டார்கள். என்னைப் பொறுத்தவரை இருவரையும் என்னை ஈன்ற தாயினும் மேலாகவே எண்ணி, இதயக்குகையில் வைத்துப் பூசை செய்து வருகிறேன். மௌன குருநாதர் தாயாகவும், தந்தையாகவும், தாங்கும் துணையாகவும் வழிபடும் தெய்வமாகவும் கடந்த 25 ஆண்டுகட்கு மேலாக எனக்கு விளங்கி வருகின்றார்கள்.

            எத்தனையோ சிரமமான வாழ்க்கைப் புயலிலும், மக்கள் நேயமும், மக்கள் தொண்டுமே மேல் என்று வாழ்ந்து வந்துள்ளேன். இதுபோல் ஓர் அபலைப் பெண்ணுக்கு வாழ்வளிக்கப் பாடுபட்டேன். அவளுக்காகவே ஒரு மணவாளனைத் தேர்வு செய்து சுவாமிகள் கையிலே தாலியைக் கொடுத்துத் திருமணம் முடித்து வைக்க ஆசைப்பட்டேன். அச்சமயத்தில் சுவாமிகள் ஒரு பயங்கர வெடிச்சிரிப்புச் சிரித்தார்கள். என் முயற்சி வீண்! என்பதை உணர்த்திய சிரிப்புதான் அது. ஏனென்றால் அந்தத் திருமண தம்பதியர் நீண்ட காலம் இனிது வாழவில்லை. சுவாமிகளின் வெடிச்சிரிப்பிலே இதன் உட்பொருளை நான் பின்னர் உணர்ந்து கொண்டேன்.

            சிவராத்திரி நன்னாளன்று நான் முதன் முதலில் அக்கரைப்பட்டி வழியாக நடந்தே வந்து குருநாதரைத் தரிசித்தேன். அப்பொழுது அவர் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார். அடுத்து ஒரு வீட்டில் வந்து அமர்ந்தார். அடுத்து ஓர் அன்பர் வீட்டில் அமர்ந்து, குழந்தை உள்ளத்தோடு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சித்தனாதன் விபூதிப் பொட்டலமும், சில பொருட்களும், அவர் உண்டு எஞ்சிய கஞ்சியும் எனக்குப் பிரசாதமாகக் கொடுத்தார்.

            அடுத்து ஒரு நாள் கதர்போர்வை ஒன்று கொண்டு போய்க் குருநாதருக்கு விரித்து வைத்தேன். எனது துணைவியார் குருநாதருக்கு உணவு தயார் செய்து கொண்டு வந்து ஊட்டினாள்.

            வல்ல நாட்டு சித்தர் பெருமகனார் கசவனம்பட்டி வழியாக ஒருமுறை வந்து சென்றபோது சுவாமிகளைப் பற்றி மிகவும் உயர்வாக என்னிடம் உரையாடினார்கள்.

            காவல்துறை அதிகாரியாக விளங்கிய எனது சகோதரர் திருவாளர் பொன். பரமகுரு அவர்களுக்கு நமது  குருநாதாரைப் பற்றி முதன் முறையாக எழுதிச் சந்திக்கவும், ஆசி பெறவும் கொண்டேன்.

            எனது நண்பர் பேராசிரியர் த.கண்ணன் அவர்கள் என்னிடம் குருபிரான் ஜீவகற்ப சமாதி நிலையைக் கட்டுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே எங்கள் பண்பாட்டுத்துறை அறையில் எழுந்தருளிய நற்செய்தியை, என்னிடம் தெரிவித்தார்.

      எனக்கு ஒரு சோதனையான கட்டத்தில் குருநாதர் பிறவிக் கோலத்திலேயே வழக்கம் போல் கனவில் காட்சி அளித்தார். பெரும்மேடையில் உணவு அண்டா ஒன்று உள்ளது. மறைந்த துணை வட்டாட்சியர் அண்ணா இராமசாமி அவர்களின் துணைவியார் (எனது அண்ணியார்) நமது மகானைத் தரிசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். உடனே குருநாதர் துண்டு கட்டிக் கொண்டு நின்றார். அண்ணியாரும் மனமுவந்து உணவு படைத்தார்கள். எனக்குப் பெரிதும் மனநிறைவு ஏற்பட்டது. அதன் பின்பு சுவாமிகளின் பின்னாலே தொடர்ந்து சென்றேன். சுவாமிகள் ஓர் இடத்தில் அமர்ந்து கொடுத்த கனவுக் காட்சியினைப் போன்றே இன்று இங்குக் குருதேவனின் மண்டபத்தில் அவர்கள் தோற்றம் இருப்பதைக் கண்டு பெரும் வியப்புக் கொண்டேன்.


துருவ நட்சத்திரம் 

திரு S.S.D. சண்முகம்

சிவகாசி

      சுவாமிஜியின் பொற்பாதக் கமலங்களுக்கு அடியேன் சண்முகத்தின் வணக்கங்கள் பல. சுவாமிஜி அவர்களால் ஆட்கொள்ளப்பட்ட அமரர். திரு. ராஜதுரை நாடார் அவர்களுடன் சேர்ந்து அடிக்கடி சுவாமிஜியைத் தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. சுவாமிகள் தைப்பூசம், பௌர்ணமி அன்று மிகவும் சந்தோசமாயிருப்பார்கள். மனத்திரையில் பழநி மலையில் வீற்றியிருக்கும் பால முருகனாக வேலும் மயிலுடன் நிற்பார்கள். சரணாகதி என்பதின் உட்பொருளை விளங்க வைத்தார்கள். அவர்களுடைய மகிமையை வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாது. ஒரு தைப்பூச நாளில் இரவு சுமார் 11 மணி இருக்கும் பொழுது தனது அருட் சக்தியினால் மின்சாரம் பாய்ச்சுவது போல இருவரின் உடல் மீது ஞான அருளைச் செலுத்த சாதாரண நிலையிலிருந்து மீண்டு பன்மடங்கு சக்தி பெற்றோம்.

      சுவாமிஜியின் பிரசாதம் உண்டால் சுமார் மூன்று நாட்களுக்குப் பசியிருக்காது. உறக்கமும் இருக்காது அறுபடை வீடும் நம் உடம்பில் எங்குள்ளது என்பதனை அறிவித்து, ஆத்ம சோதனை தான் மனிதனைத் தெய்வமாக்கும் என்று சொல்லாமல் சொல்லிப் புரிய வைப்பார்கள்.

      ஒரு சமயம் திருவண்ணாமலையில் வாழும் இறைவனின் திருமகனார் யோகி ராம்சுரத்குமார் குருமஹாராஜ் அவர்களிடம் நானும் அமரரான திரு. ராஜதுரை நாடாரும் சென்றிருந்தோம். குருமஹராஜ் திரு. ராஜதுறை நாடார் அவர்களைப் பார்த்து ஸ்ரீலஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் உங்களுக்குக் கொடிய விஷத்தைக் குடிக்கக் கொடுப்பார்கள் என்றால் தாங்கள் குடிப்பீர்களா, என்று வினவ, இதை விட வேறு பாக்கியம் எனக்கு உலகில் உள்ளதோ? எனவே சந்தோசமாகவே அதைக் குடிப்பேன் என்று அமரர் திரு. ராஜதுறை நாடார் தெரிவித்தார்கள் ஞானிகளின் விலை யாருக்குத் தெரியும்?

ஒளி வீசும் துருவ நட்சத்திரம் பால முருகனாக கசவனம்பட்டியிலே ஒளி வீசுகிறது. எல்லோருடைய உள்ளங்களிலும் அவ்வொளி வீசட்டும். சுவாமி அனுக்கிரகிப்பார்கள் என்று நம்புவோமாக!


அனிச்சை செயல் புரியும் அருட்பெரும் மௌன ஜோதி 

திரு. வா. சேஷய்யன் B,Com.,

வருவாய்த்துறை

பழனி           

      ஒருவர் நம் கண்ணைக் குத்துவது போல் விரலை நீட்டினால் நம் கண்ணிமைகள் தாமாகவே மூடிக் கொள்கின்றன. இதைத்தான் அனிச்சை செயல் என்கிறோம் (involuntary action). இதைப் போன்றே நாம் இறைவனிடத்தில் வேண்டிக் கொண்ட மாத்திரத்திலேயே நமக்கு ஒரு பதில் கிடைக்கிறது. அது வேண்டிக் கொள்வோரின் மனநிலை மற்றும் நடவடிக்கைகளைப் பொறுத்தது.

            மனத்தில் சஞ்சலம் ஏற்படும் பட்சத்தில் மௌன நிர்வாண ஸ்வாமிகளைச் சென்று தரிசிப்பது எனது வழக்கம். ஒரு நாள் டம்பளரில் டீ வாங்கிகொண்டு சுவாமிகளிடம் சென்று கொடுத்தேன். எப்போதும் கொடுத்தவுடன் பெற்றுக்கொள்ளும் சுவாமிகள், அன்று அதனைப் பெற்றுக் கொள்ளவில்லை. எனக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், வேதனை அதிகரித்தது. சுவாமிகள் செல்லுமிடங்களெல்லாம் பின் தொடர்ந்து சென்றேன். பத்து நிமிடங்கள் கழித்து இப்போது கோயில் கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு வடகிழக்குத் திசையில் அமர்ந்தார்கள். நான் சுமார் 25 அடி தள்ளி நின்று என் மனத்தில் பின் கண்டவாறு வேண்டினேன்.

            “ஆண்டவா! நான் என்ன தவறு செய்திருந்தாலும் என்னை மன்னித்து விடு. என் வேதனைகளைக் களைந்து விடு. இதற்கு நான் கையில் வைத்திருக்கும் “டீ”யைக் குடித்து என்னை ஆசீர்வதிக்க வேண்டும்”.

            இவ்வாறு நினைத்துக் கொண்ட மாத்திரத்திலேயே என்னை ஒரு கனம் பார்த்து, சொடக்குப் போட்டு சைகை செய்து அழைத்து “டீ”யை வாங்கிக் குடித்துவிட்டு அவ்விடத்திலிருந்து எழுந்து சென்றார்கள். எனக்கு மெய்சிலிர்த்தது. நம்பினவர்க்கு நடராஜன் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று நேரில் கண்டேன். எப்படி ஒருவர் நம் கண்களைக் குத்தவரும்போது, நாம் கண்களை மூடிக்கொண்டு கண்களைப் பாதுகாக்க வேண்டும் என்று தானாகவே கண் இமைகள் செயல்படுகின்றனவோ, அதே போன்று நாம் மௌன ஜோதியை நினைத்த மாத்திரத்திலேயே அதற்குக் கை மேல் பலன் உள்ளது என அறிந்தேன்.


அவதூத சுவாமிகள் 

திரு.த. கோபால கிருஷ்ணன்

ரிட்டையர்டு சர்வேயர், டிரஸ்டி, திருமங்கலம 

      நம் அவதூத சுவாமிகள் தரிசனம் 1972ல் எனக்குக் கிடைத்தது. சுவாமிகளைத் தரிசித்து வேண்டிக் கொண்டதின் பேரில் அந்த மாதமே என் மகன் ராஜாராமுவுக்குத்(M.A.(Lit)) திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இடம் கிடைத்தது. மூன்று மாதங்களில் எனக்கு இருந்த கடன் தொல்லைகள் நீங்கின. அடியேன் முன்னின்று நடத்திய ரெங்கபாளையம் ஸ்ரீ முனியாண்டி சுவாமிகள் சமாதி ஆலயம் சிறப்பாகக் கட்டி முடிக்கப்பட்டது. 

            நம் அவதூத சுவாமிகள் தரிசனம் கிடைத்த விபரங்களை எனக்கு சித்தோபதேசம் வழங்கிய ஞானகுரு பிரம்மஸ்ரீ சுவாமி சங்கரானந்தா அவர்களிடம் சென்று தெரிவித்தேன். அந்த மாபெரும் இமய ஜோதி நம் சுவாமிகளை மாபெரும் அவதூத சுவாமிகள் என்றும், அவதூதனை விட ஒரு பிரம்மரிஷி உலகில் கிடையாது என்றும், நம் சவாமிகளின் திருவடிகளைப் பற்றி நிற்பவர்கள் பெறுதற்குரிய பேரின்பப் பேற்றினைப் பெறுவார்கள் என்பதனையும் உணர்த்தி, சுவாமிகளிடம் சரணடைவதுதான் வீடுபேறு அடைய வழி என உணரச் செய்தார்கள். 

            1972முதல் 1974 வரை நான் குடியிருந்த ஊரில் இருந்து வந்து தரிசித்துச் சென்றேன். 1975ஆம் ஆண்டு சித்திரை மாதம் 1ல் திண்டுக்கல்லுக்குச் சுவாமிகளின் கிருபையால் இடமாறுதல் பெற்று தாலுகா அலுவலகத்தில் தெற்குப் பிர்க்கா சர்வேயராக பணியில் சேர்ந்தேன். சுவாமிகளின் பாத தரிசனம் அடிக்கடி கிடைத்தது. அலவலகத்திலும், உடன் பணிபுரிந்தவர்களும், அதிகாரிகளும் அடியேனை ஏதோ ஒரு வேண்டத்தகாதவனைப் பார்ப்பது போல பார்த்தனர். வேளைப்பளு அதிகம். 

            இந்நிலையில் பஞ்சம்பட்டி என்ற ஊருக்கு ஜாரி இடத்தை ஸ்தலப் பார்வையிட சப்கலெக்டர் திரு. ஜனார்த்தனம் IAS அவர்கள் தேதி குறிப்பிட்டிருந்தார்கள். அன்று நான் ஆவணங்களுடன் சப்கலெக்டர் அவர்களுக்கு ஸ்தலத்தை அளந்து காட்டவேண்டும். அந்த நாளும் வந்தது. மேற்கண்ட உத்திரவுப்படி நானும் ஸ்தலத்திற்குப் போய் ஆஜரானேன். ஆனால் ஸ்தலப் பார்வைக்கு வேண்டிய ஆவணங்களை வீட்டில் மறந்து விட்டுச் சென்றுவிட்டேன் திரும்பி வந்து எடுத்து வர நேரம் கிடையாது. 

            இதையறிந்த ரெவின்யூ இன்ஸ்பெக்டர் திரு. இராமகிருஷ்ணன் எனக்கு சப்கலெக்டர் அவர்களால் என்ன தண்டனை கொடக்கப்படுமோ என்று கவலை கொண்டார். நான் அவரிடம் கலைப்படாதீர்கள், என் கண்கண்ட நடமாடும் தெய்வமான அவதூத சுவாமிகள் காப்பாற்றுவார்கள் என்றேன். சுவாமிகளின் கருணை அவருக்குப் புரியவில்லை. என் மீது மிகவும் கவலை கொண்டார். ஜீப் ஒன்று எங்களை நோக்கி வந்தது. எதிர்வரும் ஆபத்தை நினைத்து நண்பர் நிலைகுலைந்து போனார். ஜிப்பில் வந்தவர் துணை தாசில்தார். அவர் கொடுத்த தகவல் என்னவென்றால், புலத்தணிக்கைக்காக புறப்பட்ட கலெக்டர் ஆபிஸிலிருந்து முக்கிய பைல்களுடன் வரும்படி உத்திரவு வந்தது. ஸ்தலப் பார்வை மறுதேதிக்கு மாற்றப்பட்டது. செய்தியைக் கேட்டதும் அறநிதி ரெவின்யூ இன்ஸ்பெக்டர் என்னைக்கட்டிச் சேர்த்து இறுகப் பிடித்து ஆலிங்கணம் செய்து சுவாமிகள் எனக்குச் செய்த கருணையை நினைத்து வியந்தார். பின் என்னிடம் தனி மரியாதை செலுத்தினார்.           

      சுவாமிகள் மகா சமாதி அடைவதற்கு 48 நாட்களுக்கு முன் என் குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்போதெல்லாம் சுவாமிகள் மகாசமாதி சமீபத்தில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அன்று சுவாமி அவர்கள் எனக்கும், என் குடுமபத்தினருக்கும் அளித்த அருள் செயல் கண்டு மகிழ்ந்தோம். சுவாமிகள் மகா சமாதி அடைந்த தினத்தன்று சுவாமிகளின் அருகில் இருக்கும் பெரும் பாக்கியம் எனக்கும், மற்றும் சில பக்தர்களுக்கும் கிடைக்கப்பெற்றதை என் வாழ்வில் பெரும் பேறாகக் கருதுகிறேன்.           

      சுவாமிகள் ஜீவ சமாதிக்குப் பின் ஜோதி சொரூப நிலையில் இருந்து கொண்டு இன்று வரை என் வாழ்வில் நடந்து வரும் ஒவ்வொரு காரியத்திலும் உடனிருந்து வழிகாட்டி ஒளி கூட்டி வருகிறார்கள் என்னுடைய குடும்பத்தைக் கண்ணிமைபோல் காத்து இரட்சித்து வருகிறார்கள்

ஓம் குருப்யோ நம!


நமது குருநாதர் 

திரு. ப.வரதராஜன், மதுரை 

      என்றாவது ஒரு நாள் கசவனம்பட்டி சுவாமிகளின் திருப்பாதங்களை வணங்க வேண்டும் என்பதை என் பேராசையாகக் கொண்டிருந்தேன். ஒரு பெரியவர் (30.04.1978 சித்திரை மாதம்) அன்புடன் குருநாதரவர்களைத் தரிசிக்க அழைத்தார். நாங்கள் இருவரும் குருநாதரவர்களின் திருப்பாதங்கள் பணிந்து திருவருள் பெற்றுத் திரும்பினோம்.     

      தாயைப் பிரிந்த இளம் கன்று போல் என் மனம் மீண்டும் அவரின் அருளை நாடியது. நிழல் தேடும் பறவையானேன். ஒரு நாள் ஒரு பையில் சுவாமிகளின் காட்சி முடிந்த பின் பலரும் மகிழ்ந்துண்ண பலவகைக் கனிகளையும், குருநாதர் அருந்துவதற்கு உணவுப் பதார்த்தங்கள், சிகரெட், தீப்பெட்டி ஆகியவைகளை வேறு ஒரு பையிலும் வாங்கி வைத்துக் கொண்டேன்.     

      புகை வண்டியில் ஏறி அமர்ந்தேன். பெட்டிக்குள் தீக்குச்சி அடைக்கப்பட்டது போன்ற மக்கள் திரள். பற்றிக் கொண்டிருந்த கனிகள் இருந்த பை கை நழுவி விட்டது. இதயத்தை காரிருள் சூழ்ந்தது. கவலைகள் மலர்ந்தன. கொடைரோடு வந்து இறங்கினேன். பழவகைகள் பல வாங்கி மிதிவண்டி மிதித்துக் கசவனம்பட்டியை வந்து அடைந்தேன். இறைவனை வணங்கி இனிது விருந்து படைத்து மீண்டும் கொடை ரோடு வந்தேன். மீண்டும் புகை வண்டி ஏறி மதுரை செல்ல, நிலையத்தில் நிற்க வேண்டிய புகை வண்டி வழக்கத்திற்கு மாறாகப் பாலத்திற்கு அருகே நின்றது. குருநாதருக்கு விருந்து படைக்க வாங்கிய எனது இழந்து போன இன்னுமொரு கனிகள் கொண்ட பை என் எதிரே மண்ணில் கிடந்தது. குறையேதும் குருநாருக்கு இருக்குமோ, என இதயம் குழைந்து போயிருந்தேன். உனக்குப் படைக்க வந்த ஒரு கனிப்பையை உலகில் வேறு எவருக்கும் அளிக்காமல் எனக்கே திருவருள் செய்தது என்னே உன் திருவருள்? வாழ்க குருநாதர்!.


ஸ்ரீ கசவனப் பிரபு

கசவனடிமை திண்டுக்கல்     

      1969 அக்டோபர் தீபாவளி அன்று எனது மைத்துனர் அமராவதி, என்னைச் சுவாமிகளிடம் அழைத்துச் சென்று சஷ்டி விரதம் ஆரம்பித்து வைத்தார்.  ஆனால், நான் ஓரிரு நாட்கள் விடுமுறையில் வந்திருந்தேன். 7 நாட்கள் விடுமுறையை நீட்டித்து விரதம் முடித்துப் பணிக்குத் திரும்பினேன். அதன் பின்னர் 7 நாள் விடுமுறை நிராகரிக்கப்பட்டுச் சம்பளவெட்டும் கிடைத்தது. ஆனால் நான் எவ்வித முயற்சியும் செய்யாத நிலையில் ஸ்ரீ கசவனப் பிரபுவின் ஆசியால், கருணையால் மூன்று மாதத்திற்குள் விடுமுறை சரி செய்யப்பட்டுச் சம்பள வெட்டும் நீக்கப்பட்டதுடன், பதவி உயர்வும் பெற்றுத் திண்டக்கல்லுக்கே மாற்றப்பட்டேன்.     

      எனது கடைசி மகன் 1967ல் பிறந்தான். அவனுக்குப் பிறவியிலேயே உள் நாக்கு இல்லை. பிறந்ததிலிருந்து தேரையைப் போல் போட்டது போட்டபடி ஒட்டிப்போய் இருந்தான். காதிலும், மூக்கிலும் சளி வழிந்தபடியே இரக்கும். வயிற்றுப் போக்கும் இருந்துகொண்ட இருக்கும், அவனுக்கு வீரகுரு நாகேஸ்வரன் என்று பெயரிட்டும், விரக்தி அடைந்தும், பேசாத ஊமையாய், மருத்துவர்கள் பலரும் கைவிட்ட நிலையில் சுவாமி அவர்களின் திருவடிகளில் திருவடிகளேசரணம் எனப்போட்டு வேண்டினேன். படிப்படியாகக் குணமடைந்து ஊமையும் பேசித் தற்போது திடகாத்திரமான வாலிபனாக இருக்கிறான். ஒரு குறையுமில்லை.     

      1972-ல் பல நாட்கள் தொடர்ந்து அடைமழை பெய்து எனது வீடு பாதிக்கப்பட்டு பழுதாகி விழுந்துவிட்டது. குருபிரபுவிடம் மனத்திற்குள்  வேண்டி வருந்தினேன். எவ்வித முயற்சியும் இன்றி பணவசதிகள் கடனாகப் பெற்றுக் கள்ளிக்கோட்டை ஓடு வேய்ந்து முன்பகுதி வீடு லாவகமாகக் கட்டப்பட்டது. காலப்போக்கில் வீட்டிற்கு வாங்கிய கடன்களும் அடைக்கப்பட்டன. பின்னர் எனக்கு நிம்மதியும் பிறந்தது. 

      எனக்கு மேலதிகாரிகள் இருவர் சுவாமிகளிடம் அவர்களைக் கூட்டிப்போய் தேவகனி, பூ, இவைகளைக் குருபிரபு தன்னிச்சையாக வழங்கவேண்டும் என்றனர். நான் மனத்தில் தியானித்துக் கொண்டு ஜீப்பில் சென்று இறங்கி குருபிரபுவை பூஜை செய்தேன். நான் தியானித்து வேண்டியபடி குருபிரபு அவர்கள் தானாக எங்களுக்கு தேவகனி, பூ இவைகைள மனமுவந்து அளித்தார்கள்.


காவல் தெய்வம் 

திரு. எஸ்.ராம்தாஸ்

அரிசி வியாபாரம்

திண்டுக்கல் 

      நானும் என் மனைவியும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்று தரிசனம் செய்து வந்தோம். என் மனைவிக்கு எந்த டாக்டர்களாலும் என்ன வியாதி? என்று கூற இயலாத ஒரு வயிற்றுவலி இருந்து பல வருடம் கஷ்டப்பட்டு வந்தாள். ஒரு நாள் நானும் எனது மனைவியும் வீட்டிலேயே அதிகாலையில் எழுந்து நன்னீராடி பொங்கலிட்டு சுமார் 6 மணிக்குக் கசவனம்பட்டிக்குச் சென்றோம். பகவான் எங்களை எதிர்நோக்கியபடி இருந்தார்கள். நாங்கள் சென்று பூஜைகள் செய்து பகவானுக்கு இருவரும் சாதம் ஊட்டினோம். நன்றாய் உணவு அருந்தினார்கள். அதன் பின்பு மீதம் உள்ளதை அங்குள்ள குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, அடுத்த இடத்தில் போய் அமர்ந்து இருந்தார்கள். என் மனைவியார் “எனக்கு ரொம்ப நாளாய் ஒரு வயிற்று வலி உள்ளது. தீரவில்லை. எந்த டாக்டரிடம் கேட்டாலும் ஒன்றும் உங்களுக்கு இல்லையே என்கிறார்கள். நான் தான் வேதனைப்படுகிறேன். என்று பகவானிடம் கூறினாள். நாங்கள் பகவானிடம் வலி தீருமா எனக் கேட்டோம். அவர் சிரித்துக் கொண்டே விபூதி பூசி, கீழே கிடந்த தீப்பெட்டி, குச்சி முதலியவற்றைக் கொடுத்தார்கள். பின்பு நாங்கள் திண்டுக்கல் வீடு வந்து சேருவதற்குள் அந்த வலி எந்த வழியில் போனது எனத் தெரியவில்லை.     

      மேலும் நாங்கள் எந்தக் காரியமும் அவர்களிடம் கேட்காமல் செய்வது இல்லை. அப்படி நாங்கள் கேட்டது எதுவும் சுவாமி அவர்கள் கிருபையால் நடக்காமல் இருந்ததும் இல்லை. 


வழிக்குத் துணையான எம் குருநாதர் 

திரு. ஓ.சுந்தரம்

வருவாய்த்துறை

பழனி 

      நானும் எனது அலுவலக நண்பர்களும் பகவானைத் தரிசிக்க ஒரு நாள் இரவில் பழநியில் இருந்து புறப்பட்டு 9 மணிக்கு கசவனம்பட்டிப் பிரிவு காரமடையில் வந்து இறங்கி நடக்க ஆரம்பித்தோம். நல்ல இருட்டு. நான் தான் வயதானவன்; எல்லோருக்கும் கடைசியில் நடந்தேன். என் காலடியில் பேட்டரி லைட் வெளிச்சம் மாதிரி தோன்றியது. நான் நின்று திரும்பிப் பார்த்தேன். சைக்கிளோ, ஆட்களோ ஒன்றும் இல்லை. மீண்டும் நடந்தால் வெளிச்சம். எனக்குத் தெரிந்தது போல் மற்ற பக்தர்களுக்கும் தெரிந்து பின்னால் வந்த என்னைக் கேட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு தான் புரிந்தது. எல்லாம் பகவானின் திருவருள் என பக்திப் பரவசமாகி விட்டேன்.  

      என்னுடைய வாழ்க்கைத் துணைவியார் பகவானின் ஆலயத்திற்கு வரவேண்டுமென்று பலநாள் சொல்லிக்கொண்டிருந்தாள். ஒரு நாள் காலை 11 மணி அளவில் காரமடைப் பிரிவில் இறங்கிக் கசவனம்பட்டி பஸ்ஸிற்காக காத்திருந்தோம். அப்போது ஒருவர் எங்கே போகவேண்டும் எனக் கேட்டார். விபரம் சொன்னேன். அவர் ரோடு மோசமாக உள்ளதால் பஸ் வருவதில்லை. நடந்து விடுங்கள் எனச் சொல்லி அவர் அங்கு உட்கார்ந்துவிட்டார். நல்ல வெயில், சோர்வாக இருந்தது. ஆனால் கொஞ்ச தூரம் போனதும் அங்கு உட்கார்ந்து இருந்த நபர் எங்கள் பின்னாலேயே வந்தார். பயம் ஒரு புறம், பகல் தானே என்ற தைரியம் வேறு. ஆனால் பாருங்கள் ஆச்சரியம்! அவர் பேசிக்கொண்டே ஊர் வரை வந்தார். அவருக்கு ஒரு காபி வாங்கிக் கொடுக்கலாம் எனத் திரும்பிப் பார்த்தால் அவரைக் காணவில்லை.     

      அப்போதுதான் என் மனைவி அந்த சுவாமி தான் அவரைத் துணைக்கு அனுப்பியிருப்பார். நான் கொஞ்சம் மலைப்பாக இருந்ததை ஆண்டவன் தெரிந்து கொண்டார். அதனால் தான் அனுப்பியிருக்கார். ஏனென்றால் அவர் அந்த ஊருக்குப் போவதாக இருந்தால் நமக்கு முன்னாடியே போயிருக்கலாம். நாம் போய்க் கொஞ்ச நேரம். கழித்து வந்ததால் அந்த பகவான் தான் அனுப்பியிருப்பார் என்று சொன்னாள். எல்லாம் அந்த ஆண்டவனுடைய அனுக்கிரகம் தான். அவனின்றி ஓர் அனுவும் அசையாது.